நங்கை நல்லூர் ஆஞ்சநேயா
நங்கை நல்லூர்* ஆஞ்சநேயா
ஸ்ரீராமபக்த ஹனுமானே!
எங்கெல்லாமோ தேடி அலைந்தேன் - நிம்மதியை
உன்னடியில் கண்டு கொண்டேன். 1
துன்பங்களைக் காண்கையிலே என் நெஞ்சில்
சோகம் வந்து அழுத்துதையா
உன்னை வந்து பார்க்கையிலே - அனைத்தும்
ஓடிப்போய் ஒளிந்ததையா. 2
வாழ்க்கையதன் ஓரத்திலே நான்
பாதை தெரியாது நின்றேன்
வீழ்த்தும் மதிமாந்தர் முன்னே - எங்கிருந்தோ
ஓடி வந்து காத்து நின்றாய். 3
எண்ணி எண்ணிப் பார்க்கையிலே என்னெஞ்சில்
எங்கும்நீ நிறைந்திருந்தாய்
உன்னையன்றி யாரிடமே என் குறையை
சொல்லிச் சொல்லி மாய்ந்திடுவேன்? 4
சீதையவள் சோகத்திலே
ஸ்ரீலங்கைதனில் இருக்கையிலே
பாதைதன்னைக் காட்டி விட்டாய் - ஸ்ரீராமன்
சொன்ன சேதி சேர்த்து விட்டாய். 5
வெஞ்சிறையில் வெந்து விட்டேன் வாழ்க்கை
பந்தமதில் நொந்து விட்டேன்.
தஞ்சமென உன்னையடைந்தேன் - நீயே
நல்ல வழி காட்டிடுவாய். 6
கெஞ்சிக் கெஞ்சிப் பார்த்து விட்டேன் - என்
நெஞ்சத்தையே திறந்து வைத்தேன்.
அஞ்சனையின் மைந்தனே நீ - சொல்லையா
என்று வந்து காத்திடுவாய்? 7
*'நங்கை நல்லூர்' என்ற இடத்தில் உங்கள் ஊர் பெயரை வைத்துப் பாடலாம்.
சான்று : 'அல்லிக்கேணி ஆஞ்சநேயா', 'நாமக்கல் ஆஞ்சநேயா'. 'தில்லிநகர் ஆஞ்சநேயா'...
No comments:
Post a Comment